பெருநாள் தொழுகை


நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612
பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616
ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986
தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426
முன் பின் சுன்னத்துகள் இல்லை
இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616
பாங்கு இகாமத் இல்லை
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610
மிம்பர் இல்லை
வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.
“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278
தக்பீரும் பிரார்த்தனையும்
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615
அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger