முஸ்லிம் அல்லாதவருக்கு உதவி செய்வது கூடுமா?

கேள்வி

    
நான் ஒரு நல்ல வேலையில் இருக்கின்றேன். பலருக்கு வேலை வாங்கித் தருகின்றேன். என்னுடைய பிறமத நண்பர் ஒருவர் என்னிடம் வேலை வாங்கித் தருமாறு கேட்டார். அவருக்கு வயது அதிகமாக இருப்பதால் வேலை வாங்கித் தர முடியவில்லை. நான் முஸ்லிமாக மாறினால் தான் வேலை வாங்கித் தருவீர்களா? என்று என்னிடம் கேட்கிறார். அவருக்கு நான் எப்படி பதில் தருவது?

அபூஜ‚னைத், பஹ்ரைன்

பதில் 
இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது. ஒருவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தை ஏற்க வைப்பதை அல்லாஹ் ஏற்க மாட்டான். இஸ்லாத்தின் கொள்கைகளைப் புரிந்து மனப்பூர்வமாக ஏற்றால் தான் ஒருவர் முஸ்லிமாக முடியும்.
لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنْ الغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدْ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ(256)2
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.

அல்குர்ஆன் 2 : 256

முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு சில தேவைகள் ஏற்படும் போது இஸ்லாத்திற்கு வந்தால் தான் அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொடுப்பேன் என்று கூறினால் இதுவும் அவரை நிர்பந்தப்படுத்துவதாகும். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.  
      
ஒருவர் சிரமப்படும் போது அவருக்கு உதவி செய்வது மனித நேயமாகும். மனித நேயத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் மதத்தை ஏற்றால் தான் உதவி செய்வேன் என்று கூறினால் இது மனித நேயத்துக்கு எதிரான செயலாகும். 

இஸ்லாம் மனிதநேயமிக்க மார்க்கம். கருணை, உதவி, அரவணைப்பு ஆகியவற்றைப் போதிக்கக்கூடிய மார்க்கம். இந்த சந்தர்ப்பங்களில் ஒரு முஸ்லிம் உதவி செய்யப்படுபவரின் பலவீனமான நிலையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு உதவ வேண்டும். 

இதையே திருக்குர்ஆனும் நபிமொழிகளும் போதிக்கின்றது. 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8) المائدة : 85

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5 : 8

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8) الممتحنة : 8

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 60 : 8

وَإِنْ أَحَدٌ مِنْ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْلَمُونَ(6)

இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் (9 : 6)
    
பெற்றோர்கள் இணைகற்பிப்போராக இருந்தாலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (15)31

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்!

அல்குர்ஆன் (31 : 15)

2620 حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ وَهِيَ رَاغِبَةٌ أَفَأَصِلُ أُمِّي قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ 

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள்.  அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள்.  நான் அல்லாஹ்வின் தூதரிடம், "என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்.  என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2620

வேறு கொள்கையில் உள்ளவர்கள் உதவி கேட்டால் முதலில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பிறகு அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துக்கூறலாம். அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இதில் நிர்பந்தம் எதுவும் இல்லை. நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் இப்படித்தான்வழிகாட்டியுள்ளார்கள். 

1356 حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ غُلَامٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ النَّارِ رواه البخاري

அனஸ் (ரலி)  அவர்கள் கூறுகிறார்கள் :

நபிக்ள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, "இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!'' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், "அபுல் காசிமாகிய நபி (ஸல்) அவர்களின்  கூற்றுக்குக் கட்டுப்படு!'' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “"இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

நூல் : புகாரி 1356

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உமர் (ரலி) அவர்கள் இணைவைப்புக் கொள்கையில் இருந்த தன் சகோதரருக்கு அன்புளிப்பு கொடுத்தார்கள். அதை நபியவர்கள் தடைசெய்யவில்லை. 

886 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்üவாசல் நுழைவாயிலருகே கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, "அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக்கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் அணிந்துகொள்ளலாமே!'' என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) இதை அணிவார்'' என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதை  நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை! (அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன்பெற்றுக்கொள்ளவே நான் வழங்கினேன்)'' என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்துவிட்டார்கள்.

நூல் : புகாரி 886

எனவே இஸ்லாத்திற்கு வந்தால் தான் உதவி செய்ய வேண்டும் என்ற நிலைபாடு இஸ்லாத்திற்கு எதிரானது. இதை இஸ்லாம் ஏற்கவில்லை என்பதை உங்கள் நண்பருக்கு எடுத்துச் சொல்லுங்கள். 

குறிப்பிட்ட வயதுடையவருக்குதான் ஒரு வேலை கிடைக்கும் என்றால் முஸ்லிமுக்கும் கூட நான் வேலை வாங்கித் தர முடியாது. எனவே இங்கு வயது தான் காரணமே தவிர மதம் காரணமல்ல என்பதைப் புரிய வையுங்கள்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger