Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label பொது செய்திகள். Show all posts
Showing posts with label பொது செய்திகள். Show all posts

பூரண மதுவிலக்கு! ஓர் இஸ்லாமிய அணுகுமுறை!


மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருட்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையைப் படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். 

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது. எத்தனையோ சமூக ஆர்வலர்களும், மக்கள் நல இயக்கங்களும் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் மதுவை மக்கள் மனதிலிருந்து தூக்கி எறிவதற்கு இவர்களால் முடிவதில்லை. 

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் மதுவை விட்டுவிட முடிவதில்லை. எனவேதான் போதைக்கு அடிமையானவர்கள் இந்தக் குடிப்பழக்கத்தை மறக்க மருத்துவமனைகளை நாடிச்செல்கின்றனர். சில மருத்துவர்கள் பிரத்யேகமாக இந்தப் பிரச்சனைக்கு மாத்திரம் மருத்துவம் செய்ய முன் வருகிறார்கள். எவ்வளவு மருத்துவமனை பெருகினாலும் மது ஒழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் மதுக்கடைகளும், மதுப் பிரியர்களும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறார்கள்.

 திருக்குர்ஆன் செய்த மருத்துவம் 

குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு,எழுத்தறிவில்லாமல் காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மது பேரல்களை உடைத்தெறியும் அளவிற்குப் பெரும் மறுமலர்ச்சி ஒன்று அரபு தேசத்தில் உருவானது.அரபியர்களிடத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்குக் குர்ஆன் அவர்களுக்கு அளித்த அற்புத பயிற்சியே காரணம். இந்தப் பயிற்சி தான் அவர்களுக்கு மதுவின் மீது இருந்த மோகம் செல்வதற்கு சிறந்த மருந்தாக இருந்தது.

எடுத்த எடுப்பிலேயே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட காலகட்டங்களில் வௌ;வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் மறைமுகமாக முன்வைத்தது. 

அல்லாஹ் தன் திருமறையில்... 

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. [அல்குர்ஆன் 16:67]

இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான். இதன் பிறகு மதுவில் கேடுதான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது என்றாலும் மதுவைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை. 

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர்.அவ்விரண்டிலும் பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும்,மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:219) 

இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது.ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப் பட்டுள்ளது.தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டுமென்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவேதான் நுட்பமான நுண்ணறிவு படைத்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் 
அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான். 

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு  நெருங்காதீர்கள்! (அல்குர்ஆன் 4:43) 

இந்த வசனம் இறங்குவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது. 
அலீ (ரலி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) ஆகிய இருவரையும் அன்சாரி குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவைக் குடிக்கக் கொடுத்தார்.(இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ(ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதி விட்டார். அப்போதுதான் (மேற்கூறப்பட்ட) அல்குர்ஆன் 4:43 வசனம் இறங்கியது அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: அபூதாவூத் (3186) 

இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது. 

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90) 

எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில்; எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட்படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது எப்படி சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும் என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மன நிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான். எடுத்த எடுப்பிலே மதுவைக் குடிக்கக் கூடாது என்று கூறியிருந்தால் இச்சட்டத்திற்கு யாரும் கட்டுப்படிருக்க மாட்டார்கள். இதை ஆயிஷா(ரலி) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். 

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதாவது... 

எடுத்த எடுப்பிலேயே நீங்கள் மது அருந்தாதீர்கள் என்று வசனம் அருளப்பட்டிருந்தால் மக்கள் நாங்கள் ஒரு போதும் மதுவைக் கைவிட மாட்டோம் என்று 

கூறியிருப்பார்கள். (ஆகவே தான் அல்லாஹ் படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்) புகாரி 4993

இறை நம்பிக்கை அவசியம் 

இஸ்லாம் என்பது உண்மையான ஆன்மீகம்.மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்து வழிகாட்டும் மார்க்கம்.மறுமை வாழ்க்கையை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மறுமைக்காகத் தான் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தது. எனவே இஸ்லாத்தை நேசித்து ஏற்றுக் கொண்ட நபித்தோழர்கள் மதுவின் சுகத்துக்கு அடிபணியாமல் மதுவை விடப் பன்மடங்கு நேசித்த குர்ஆனின் கட்டளைக்கு உடனே பணிந்தார்கள்.மக்களிடத்தில் இது போன்ற பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமானால் வெறும் தந்திரங்கள் இருந்தால் மாத்திரம் போதாது. உண்மையான ஆன்மீகக் கொள்கை அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சட்டங்களால் ஏன் பயன் ஏற்படுவதில்லை? 

மக்களுடைய நன்மையைக் கருதி ஆட்சியாளர்கள் சில சட்டங்களை இயற்றுவார்கள். ஆனால் அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த விடாமல் மக்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். உதாரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் விபச்சாரத்தை தூண்டும் விதத்தில் பெண்கள் நடந்து கொண்டால் அதைச் சட்டம் தடுக்காது. விபச்சாரத்திற்கு பகிரங்கமாக அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு சட்டம் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளும் ஆண்களை இச்சட்டம் கைது செய்வதில்லை. விபச்சாரம் செய்தால் ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறது. 

கற்பழிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டு கற்பழிக்கத் தூண்டும் ஆபாசப் படங்களை அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.இப்படி தவறுக்கு அழைக்கும் காரண காரியங்களைக் களையாமல் சட்டம் இயற்றினால் அந்தச் சட்டத்தினால் என்ன பயன்? 

எனவே தான் இஸ்லாம் மது குடிக்கக் கூடாது என்ற ஒரு தடையை மட்டும் விதிக்காமல் மதுவைக் குடிக்கத் தூண்டும் எல்லா காரியங்களையும் தடை செய்கிறது. மதுவைக் குடிப்பது எப்படி தடையோ அது போல் விற்பதும், பிறருக்கு அன்பளிப்பாகத் தருவதும், அதை வைத்து மருத்துவம் செய்வதும், மதுவை சமையல் காடியாக மாற்றுவதும் கூடாது என்று சொல்கிறது.மதுவுடன் சம்பந்தப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்து ஒரு மனிதன் மதுவுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படக் கூடாது என்று வலியுறுத்துகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்... 

மதுபானத்தையும், அதை பருகுபவரையும், பிறருக்குப் பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும் அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்ப வரையும், அதை சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: இப்னு மாஜா 3371

மதீனத்துச் சாலைகள் மது ஆறுகளாக மாறின  மதுவை ஒழிப்பதில் இத்தனை நுணுக்கங்களையும் இஸ்லாம் கவனத்தில் கொண்டு சட்டம் இயற்றியதால்தான மதீனத்து மக்கள் தெருக்களில் மதுபானங்களைக் கொண்டு வந்து கொட்டக்கூடிய உன்னத நிலை உருவானது. 

(முழு மதுவிலக்கு வருவதற்கு முன்பு ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவில் (மக்களுக்கு) உரையாற்றினார்கள். அப்போது, 'மக்களே! அல்லாஹ் மதுவிலக்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறான். விரைவில் அது தொடர்பாக ஓர் ஆணையை அல்லாஹ் அருளக்கூடும். எனவே தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று அதன் மூலம் பயனடைந்து கொள்ளட்டும்' என்று கூறினார்கள். சிறிது காலம் கூட கழிந்திருக்கவில்லை. அதற்குள் நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டான். எனவே தம்மிடம் மதுவில் வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால் மதுவை அவர் அருந்தவும் வேண்டாம். விற்கவும் வேண்டாம்' என்று சொன்னார்கள். உடனே மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டிவிட்டனர். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம் 3219

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்   எவ்வளவு அற்புதமான, அறிவுப்பூர்வமான சட்டங்களை இயற்றினாலும் அச்சட்டத்தை மீறுகின்ற வகையில் சிலரை ஷைத்தான் தூண்டிவிடாமல் இருக்க மாட்டான். அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய சட்டத்தை மீறுவார்கள். இந்நிலையில் சட்டத்தை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தீட்டிய திட்டங்கள், முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். 

குற்றம் புரிபவனைப் பார்த்து மற்றவன் தவறு செய்ய ஆரம்பிப்பான்.எனவே சட்டத்தை மீறுபவனுக்கு உண்மையான தண்டனையை வழங்கினால் அல்லாஹ்விற்குப் பயப்படாதவன், அரசாங்கத்திற்குப் பயந்தாவது சட்டத்தை மீறாமல் இருப்பான். எனவேதான் இஸ்லாம் மது குடிப்பவர்களுக்குத் தண்டனைகளை விதித்து, இக்குற்றத்தைச் செய்ய விடாமல் அவர்களை தடுக்கிறது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

'மது குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள் அறிவிப்பவர்: முஆவியா(ரலி) நூல்: அபூதாவுத் 3886 

மது என்ற கொடிய தீமையைப் பரவவிடாமல் இஸ்லாம் ஒழித்துக் கட்டிய விதத்தை இன்றைய உலகம் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் இந்த உலகம் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும், ஆரோக்கியத்தையும் நிரம்பப் பெற்ற உன்னத உலகமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மனிதர்களை நேர்வழிப்படுத்துவதில் அல்லாஹ் மேலானவன்!
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger