புனே வரை நீண்ட வாதம் - 1



அஸ்ஸலாமு அலைக்கும், அன்புள்ள சகோதரர்களுக்கு,

எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் பெற்று தாங்கள் வாழ பிரார்த்தித்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.உரையாடல்  
இஸ்லாமிய அழைப்புப் பணிசெய்ய எனது வாழ்க்கையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை தங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எங்களுக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு நன்றிகளை தெரிவித்தவனாக எனது இந்தப்பதிவை ஆரம்பம் செய்கிறேன்.
நான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பூனே நகரில் வேலை செய்துகொண்டு இருக்கிறேன். கடந்த 25-Jan-2010 அன்று நானும் எனது மனைவியும் பூனே நகரில் இருந்து இரயில் பயணமாக எனது சொந்த ஊறான மதுரைக்கு சென்று கொண்டிருந்தோம். மாலை நான்கு மணிக்கு எங்களது இரயில் கிளம்பியது. எங்களுடைய டிக்கெட் RAC என்பதால், இருவரும் ஒரே இருக்கையை பகிர்ந்து அமர்ந்திருந்தோம்.
எங்களுக்கு எதிரே, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் அமர்ந்திருந்தனர். 25 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அவரது மனைவியும், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அவரது மனைவியும் அவர்களது இரு புதல்விகள், ஒருவருக்கு சுமார் 8 வயதும் மற்றொன்று 6 மாதங்களே ஆன ஒரு கைக்குழந்தையுமாக அவர்களது குடும்பம் இருந்தது.
நாங்கள் ஒருவருக்கு ஒருவர் எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். கைக்குழந்தை இருந்ததினால் அறிமுகம் செய்துகொள்வது சற்று எளிதான காரியமாகவே இருந்தது. அவர்களும் மிகக்கனிவாக பேசினார்கள். இரவில் அவர்களது 8 வயது மகளுக்கான இருக்கையில் எனது மனைவியை தூங்கிக்கொள்ள அனுமதித்தார்கள். ஆக, மிகவும் சுமூகமான முறையில் அன்றையதினம் கழிந்தது.
மறுநாள் காலை உணவு முடிந்தபிறகு, எல்லோருமாக அமர்ந்து பொதுவாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் ஒரு கிறிஸ்தவ மத பேராயர் என்பதையும் மும்பையில் சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் என்பதையும், அங்கிருந்த மற்றொருவர் அவரது தம்பி மகன் என்பதனையும் அறிந்துகொண்டோம். இவ்வாராக உரையாடல்கள் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஹிஜாப் அணிந்திருந்த என் மனைவி தனது தலைச்சீலையை சரிசெய்து கொண்டிருந்தார். அதனைப்பார்த்த அந்த பாதிரியாரின் மகன், ”இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது ஏன்? இது கட்டாயம் செய்யவேண்டுமா?” என தனது சந்தேகத்தை முன்வைத்தார்.
இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தவர்களாக எங்களுக்கு தெரிந்த விளக்கங்களை நாங்கள் கூறினோம். பிறகு ”தீவிரவாத செயல்களில் முஸ்லிம்கள் அதிகம் ஈடுபடுவது ஏன்?” “முஸ்லிம்கள் பலதாரமனம் செய்வதேன்?” இஸ்லாத்தின் அடிப்படைகள் என்ன?” “முஹம்மது நபி என்பவர் யார்?” ”இஸ்லாத்தில் பெண்களை அடக்குமுறைக்குள்ளக்குவது ஏன்?”, “இஸ்லாமிய சட்டங்கள் மிகக்கொடுமையாக இருப்பதேன்?” என தனக்கு இருந்த பல சந்தேகங்களை அவர் கேள்விகளாக தொடுத்தார். நாங்களும் எங்களுக்கு தெரிந்த பதில்களை எங்களால் இயன்ற அளவிற்கு அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்தினோம்.
பிறகு இறைத்தூதர்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது “இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஏசுவும் ஒரு இறைத்தூதர்தான். கிறிஸ்தவர்கள் வணங்கக்கூடிய கர்த்தரும் முஸ்லிம்கள் வணங்கக்கூடிய அல்லாஹ்வும் ஒருவரே. ஆனால் ஏசுவை நீங்கள் கர்த்தரின் மகன் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்களோ அவரை கர்த்தரின் தூதர் என கூறுகிறோம்” எனக்கூறி கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில் நுழைய ஆரம்பித்தோம்.
அதில் முதலாவதாக, கிறிஸ்தவம் என்பது என்ன? அந்த மதத்தின் கொள்கைகள் என்ன? என்பவைகளை விளக்குமாறு கோரினோம். அதற்கு அந்த பேராயர் அவர்கள் “ஆதி மனிதர் ஆதாம் அவர்கள் ஒரு தவறு செய்தார். அதன் காரணமாக அவரும் அவரது மனைவியும் சபிக்கப்பட்டார்கள். எவ்வாறு சபிக்கப்பட்டார்கள் என்றால், ஆதாமின் சந்ததியில் வரும் ஆண்கள் அனைவரும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைத்து தங்களின் வாழ்க்கையை நடத்தவேண்டும். ஆதாமின் சந்ததியில் வரும் பெண்கள் அனைவரும் தாங்க முடியாத வலியை பிரசவிக்கும்போது அனுபவிக்கவேண்டும் - என ஆண்டவர் மனிதகுலத்தை சபித்து சுவர்க்கத்தை விட்டு வெளியேற்றினார்” என கூறிக்கொண்டிருக்கும்போதே நாங்கள் இடைமறித்து,
”தாங்கள் தற்போது கூறியதில் எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதனை தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் எனக்கூறி, “இறைவன் மனிதகுலத்திற்கு அளித்த சாபம் என தாங்கள் கூறிய இந்த சம்பவம் பைபிளில் உள்ளதா?” எனக்கேட்டோம். அதற்கு அவர்களும் ஆம் என்றார்கள்.
அப்போது நாங்கள் அவரிடம் “நாங்கள் கேட்பதை தவறாக நினைக்க வேண்டாம். ஆண்டவர் மனிதகுலத்திற்கு இட்ட சாபம் உண்மையாக இருக்குமெனில், சர்ச்சில் வேலைசெய்யக்கூடிய பாதிரியார்கள் யாருமே நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைப்பது இல்லை. மேலும், சர்ச்சில் இருக்கக்கூடிய கன்னியாஸ்திரிகள் யாருமே குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. அதனால் அவர்கள் தாங்கமுடியாத வலியை அனுபவிப்பதும் இல்லை. ஆக, பைபிளில் ஆண்டவர் கொடுத்த சாபம், பைபிளை பின்பற்றக்கூடிய பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரிகளுக்குமே பலிக்கவில்லையே! அது ஏன்?” என வினவினோம்.
அதற்கு அவர்கள் “அப்படி இல்லை. இந்த கஷ்டங்கள் இல்லாத மனிதர்களுக்கு வேறு வகையான சங்கடங்கள் அவர்களது வாழ்க்கையில் இருக்கும். எப்படியாயினும் எல்லா மனிதர்களும் கஷ்டங்களை அனுபவித்தே தீர வேண்டும்” என கூறினார்கள்.
அப்போது நாங்கள் “மனிதகுலம் அனைத்துமே சங்கடங்களை அனுபவித்தே ஆகவேண்டும் என ஆண்டவர் சபித்திருந்தால் நீங்கள் சொல்லக்கூடிய வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆண்டவரோ குறிப்பிட்ட ஒரு செயலை கூறி இதுதான் மனிதகுலத்திற்கு தண்டனை என சபிக்கிறார். உதாரணமாக அனைத்து மனிதர்களும் மல ஜலத்தை தங்களில் வாழ்நாள் முழுவதும் சுமந்தே செல்லவேண்டும் என ஆண்டவர் சபித்திருந்தால், அதனை ஒரு சாபமாக ஏற்றுக்கொள்ளலாம். காரணம் அது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. ஆனால், பைபிளில் ஆண்டவர் இட்ட சாபமானது நடப்பு உலகில் பலருக்கு பொருந்தாத சாபமாகவே உள்ளதே! அது ஏன்?” என வினவினோம்.
சிறிது நேரத்திற்கு மௌனமான இருந்துவிட்டு  “ஆண்டவரின் சாபம் ஒருபுறம் இருக்கட்டும். தற்போது கொள்கைக்கு வருவோம். ஆதாமும் ஏவாளும் தவறு செய்துவிட்டார்கள். அதனால் அவர்கள் பரலோக இராஜியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மூலமாகவே இவ்வுலகில் சந்ததிகள் உண்டாயின. அவர்கள் பாவம் செய்த காரணத்தினால் அவர்களுக்குப் பிறந்த மனித சமுதாயமும் பாவிகளாகவே பிறந்தனர்…” என்று கூறிக்கொண்டிருக்கும்போது நாங்கள் மீண்டும் இடைமறித்து,          
 ……தொடரும்
நன்றி - JESUSINVITES 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger