மன்னித்த பின் தவறைச் சொல்லிக்காட்டலாமா?

மன்னித்த பின் தவறைச் சொல்லிக்காட்டலாமா?

நஸ்ரின்
பதில்  
யாரேனும் நமக்கு தீமை செய்தால் அவர்களை மன்னிக்கவும் அவர்கள் செய்த தீமையின் அளவுக்கு தண்டிக்கவும் அல்லாஹ் நமக்கு உரிமை வழங்கியுள்ளான். ஒருவர் நமக்குச்செய்த அநீதியை மனித்துத் தான் ஆகவேண்டும் என்று எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இல்லை. ஒருவரை மன்னிக்காமல் நாம் மரணித்து விட்டால் அதற்காக அல்லாஹ் மறுமையில் நம்மைக் கேள்வி கேட்க மாட்டான். மறுமையில் நாம் முறையிடும் போது நமக்கு அல்லாஹ் நீதியும் வழங்குவான்.
ஆனால் தண்டிப்பதைவிட மன்னிப்பது மிகவும் சிறந்த்து. மன்னிக்காமல் இருப்பதால் மறுமையில் எதிரியிடமிருந்து நமக்கு பெற்றுத்தரப்ப்டும் நன்மையை விட மன்னிப்பதால் அல்லாஹ்விடம் சிறந்த கூலி உண்டு. இந்த நன்மையை எதிர்பார்த்துத் தான் ஒருவரை நாம் மன்னிக்க வேண்டும்.
கீழ்க்காணும் வசனங்களில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.
திருக்குர்ஆன் 16:126
தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.
திருக்குர்ஆன்  42:40
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 24:22
அல்லாஹ்விடம் மகத்தான கூலியை எதிர்பார்த்து மன்னித்து விட்டால் அந்த நிமிடமே அவர் நமக்கு அநீதியிழைக்காதவர் போல் நடந்து கொள்ள வேண்டும். இதுதான் மன்னிப்பதன் பொருள். மன்னித்து விட்டதாக கூறிவிட்டு பின்னர் அதை நாம் சொல்லிக் கொண்டு இருந்தால் நாம் உண்மையில் மன்னிக்கவே இல்லை என்று தான் பொருள். இதுதான் மன்னிப்பின் பொருள் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
திருக்குர்ஆன் 3:159
நபித்தோழர்கள் செய்த தவறை நபியவர்கள் மன்னிக்க வேண்டும் என்று போதிக்கும் இறைவன் அதன் பின்னர் அவர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும் எனவும் நபிகளுக்கு வழிகாட்டுகிறான். தவறு செய்வதற்கு முன் எப்படி ஆலோசனை கலந்தார்களோ அது போல் தான் மன்னித்த பிறகும் நடக்க வேண்டும் என அல்லாஹ் வழிகாட்டுகிறான்.
எனவே மன்னித்த பின் அதை மனதில் வைத்துக் கொண்டு நடந்தால் மன்னிக்கவில்லை என்பதுதான் பொருள். மன்னிப்பதற்கான எந்த நன்மையும் கிடைக்காது.
* மன்னிக்காமல் இருக்க உரிமை உண்டு
* மன்னிப்பது சிறந்தது
* மன்னித்த பின் அதை சொல்லிக் காட்டி வேதனைப்படுத்தினால் மன்னிக்கவில்லை என்பதே அதன் பொருள்
ஆகிய மூன்று விஷயங்களுடன் மற்றொரு எச்சரிக்கையையும் அல்லாஹ் செய்கிறான்.
ஒருமனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் அநியாயங்களில் அவனது குடும்பத்தில் ஒருவனை கொலை செய்வதாகும். இந்தக் கொலையைக் கூட மன்னித்து நட்டைஈடு பெற்றுக் கொள்ள அல்லாஹ் அனுமதி அளிக்கிறான்.
இப்படி மன்னித்த பிறகு வரம்பு மீறினால் கடும் தண்டனை உண்டு என்பது தான் அந்த கடும் எச்சரிக்கை. மன்னித்து விட்டு வரம்பு மீறி அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவதை விட மன்னிக்காமல் இருப்பது மேலானது. மன்னித்த பிறகும் யார் வரம்பு மீறுவோம் என்று அஞ்சுகிறார்களோ அவர்கள் மன்னிக்காமலே இருந்து விடலாம். இதனால் சில நன்மைகள் நமக்குக் கிடைக்காமல் போகுமே தவிர தண்டனை எதுவும் கிடைக்காது. ஆனால் மன்னித்த பின் சொல்லித் திரிந்தால் தண்டனைக்கும் ஆளாக நேரிடும். இதைப் பின்வரும் வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும்.இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குஆன் 2:178
18.11.2012. 08:07
நன்றி - onlinepj.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger