மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?


  கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிருந்து மனிதன் படைக்கப் பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என எனது மாற்று மத நண்பர் கேட்கிறார்! - ?

கேள்வி 2: உலகம் இயற்கையாகவே தோன்றியது. முதலில் புழு பூச்சிகள் உண்டாயின. அவற்றில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு ஒரு வித குரங்குகள் தோன்றின. அக்குரங்குகள் மேலும் வளர்ச்சியடைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன என்று எனது மாற்று மத நண்பர் கூறுகிறார். இது சரியா? -

பதில்: பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்று கிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.

சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!

எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனித னுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது. அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?

இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.

வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.

டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.

முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும். ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

'என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு' எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.
எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.
 
இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் - நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.

இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது. ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை. எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.

யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?
கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை? இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.

மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.

நன்றி - onlinepj 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger